ஐபிஎல் 2022: சாம்சன் அரைசதம்; அணியை காப்பற்றிய ஹெட்மையர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - சஞ்சு சாம்சன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் இந்த சீசனில் அசுர ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயரும் 13 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்தார். அவருக்கு உருதுணையாக விளையாடிய ரியான் பராக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 54 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சனும் சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ஒரு நல்ல ஸ்கோர் கிடைக்க உதவினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரான் ஹெட்மையர் 27 ரன்களைச் சேர்த்தார்.