ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
16 ஆவது சீசன் ஐபில் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 38ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய 12 ரன்களிலேயே அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
கைல் மேயர்ஸ் 4 சிக்சர்களை விளாசி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களுக்கு விக்கெட்டாக லக்னோ ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆயுஷ் பதோனியும், மார்கஸ் ஸ்டோனிஸூம் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க, பதோனியை 43 ரன்களில் லியாம் லிவிங்ஸ்டன் வெளியேற்றினார்.
பேட்ஸ்மேன்கள் விக்கெட்டானாலும் 40 ரன்களுக்கு குறையாமல் சேர்த்தது அணிக்கு பலமாக அமைந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட ரசிகர்கள் குதூகலித்தனர். இனியும் வேலைக்காகாது என முடிவெடுத்த சாம் கரன், மார்கஸ் ஸ்டோனிஸை 72 ரன்களில் வெளியேற்றி பஞ்சாப் அணிக்கு ஆசுவாசத்தை கொடுத்தார்.
நிலைத்து விளையாடிய நிக்கோலஸ் பூரனும் 45 ரன்களில் பெவிலியன் திரும்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த லக்னோ 257 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மார்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய அந்த ஓவரில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகவர் தவான் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங்கும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த அதர்வா டைட் - சிக்கந்தர் ரஸா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த சிக்கந்தர் ரஸா 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த அதர்வா டைட் 66 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 23 ரன்களிலும், சாம் கரண் 21 ரன்களிலும், அதிரடியாக விளையாடி வந்த ஜித்தேஷ் சர்மா 24 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களை மட்டுமே எடுத்தது.
லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.