ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; ஆர்சிபியை வழியனுப்பியது குஜராத் டைட்டன்ஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்களுக்கான 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு தற்போது மும்பை - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயா கடும் போட்டி நிலவியது.
அதன்படி இன்று நடைபெற்ற 70ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூரு அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது.பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது மழை காரணமாக தமதமாக தொடங்கியது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் டூ பிளெசிஸ் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடந்து வந்த மேக்ஸ்வெல் மற்றும் லோம்ரோர் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த பிரேஸ்வெல் உடன் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி.
அதன்பின் பிரேஸ்வெல், 26 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி, 60 பந்துகளில் சதம் கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் (மொத்தம் 7 சதம்) பதிவு செய்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சதம் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு வழக்கம்போல் விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சஹா விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் 2 சிக்சர், 7 பவுண்டரி என 53 ரன்களை எடுத்திருந்த விஜய் சங்கர் ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய தசுன் ஷனகா, டேவிட் மில்லர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சிக்சர் விளாசி சதமடித்ததுடன், அணிக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்மன் கில் 52 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 104 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு சுக்குநூறானது. மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.