ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் காட்டடி; ஹைதராபாத்திற்கு 204 டார்கெட்!

Updated: Sun, Apr 02 2023 17:20 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் - ஜோஸ்பட்லர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கிய இந்த இணை ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் என்று விளாச ராஜஸ்தான் அணி மூன்றே ஓவர்களில் 37 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் புவனேஷ்வர் குமார், ரன்ரேட்டை கட்டுப்படுத்த வாஷிங்டன் சுந்தரை அழைத்து வந்தார். பவர்பிளே ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக வீசுவார் என்பதால், ரன் ரேட்டை கட்டுப்படுத்துவார் என்று பார்க்கப்பட்டது. 

ஆனால் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் பந்திலேயே பட்லர் சிக்சர் விளாச, மீண்டும் 2ஆவது பந்திலும் சிக்சர் சென்றது. தொடர்ந்து அந்த ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணி 4 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து வேறு வழியின்றி நடராஜனிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த ஓவருக்காகவே காத்திருந்தது போல் பட்லர், ஹாட்ரிக் பவுண்டரி உட்பட 4 பவுண்டர்களை விளாசினர்.இதனால் 5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 73 ரன்கள் சேர்த்தது. 

தொடர்ந்து 20 பந்துகளிலேயே பட்லர் அரைசதம் கடக்க, ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென புரியாமல் திணறினர். ஆனால் ஃபரூக்கி வீசிய பந்தில் பட்லர் 54 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து, ஐபிஎல்தொடரில் தங்களது அதிகபட்ச பவர்பிளே ரன்னை பதிவுசெய்தது. 

அதன்பின் ஜெய்ஷ்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் உயர்ந்து கொண்ட இருந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஷ்வால் 34 பந்துகளில் அரைசதம் கடந்து 54 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 2, ரியான் பராக் 7 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். அதன்பின் அவரும் 55 ரன்களைச் சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் ஹெட்மையர் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஓரளவு ரன்களைச் சேர்க்கம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹாக் ஃபரூக்கி மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை