ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!

Updated: Fri, Apr 21 2023 21:08 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன். 

சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்து, ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹாரி ப்ரூக் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஹாரி ப்ரூக் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அஷேக் சர்மா 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 21 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 12 ரன்களிலும், மயங்க் அகர்வால் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஹென்றிச் கிளாசெனும் 17 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய மார்கோ ஜான்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஓரளவு ரன்களைச் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை