ஐபிஎல் 2023: ருதுராத் மிரட்டல், தோனி ஃபினீஷிங்; குஜராத்திற்கு 179 ரன்கள் டார்கெட்!

Updated: Fri, Mar 31 2023 21:37 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. 

அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார். ஆனால் அதேசமயம் டெவான் கான்வே ஒரு ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய மொயின் அலி 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் சதத்தை நெருங்கிய நிலையில் 50 பந்துகளில் 9 சிக்சர், 4 பவுண்டரிகள் என 92 ரன்களில் விக்கெட்டை இழந்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் தூக்கியடிக்க முயற்சித்து விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து 19 ரன்களில் ஷிவம் துபே விக்கெட்டை இழக்க, இறுதியில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணிக்கு தேவையான் ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி, அல்ஸாரி ஜோசப், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை