ஐபிஎல் 2023: மீண்டும் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Mon, May 15 2023 23:27 IST
IPL 2023: Gujarat Titans beat Sunrisers Hyderabad by 34 runs! (Image Source: Google)

16ஆவது  சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குருப் சுற்றில் இன்னும் 9 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாததால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி நீல இளஞ்சிவப்பு  நிற ஜெர்ஸியில் விளையாடியது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில், முதல் ஓவரிலேயே சாஹா பூச்சியத்தில் ஆட்டமிழந்தாலும் கில் மற்றும் சாய் சுதர்ஷன் அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் குவித்தனர். 15வது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

கில் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். சாய் சுதர்ஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய குஜராத் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 188/9 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றைய போட்டியிலும் சொதப்பலான பேட்டிங்கையே வெளிப்படுத்தி ஏமாற்றமளித்தது.  இதில்  அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களிலும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்கம் 10 ரன்கள், ராகுல் திரிபாதி ஒரு ரன், சன்விர் சிங் 7 ரன், அப்துல் சமாத் 4 ரன்களிலும் என அடுத்தது ஷமி, மோஹித் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் வழக்கம்போல் தனது  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய் ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்து ஆறுதலளித்தார். அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 64 ரன்களை எடுத்திருந்த கிளாசெனும் முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து 27 ரன்களில் புவனேஷ்வர் குமார் விக்கெட்டை இழக்க, அதன்பின் நிர்ணயிக்கப்பட்ட் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மோஹித் சர்மா, முகமது ஷமி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நழைந்தது. அதேசமயம் ஹைதராபாத் அணி தொடரிலிருந்து வெளியேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை