ஐபிஎல் 2023: முதல் சதத்தைப் பதிவுசெய்த ப்ரூக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத்!

Updated: Fri, Apr 14 2023 21:17 IST
IPL 2023: Harry Brook's Maiden ton help SRH post a total of 228 on their 20 overs! (Image Source: Google)

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறக்கிய ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக் - மயங்க் அகர்வால் இணை களமிறங்கியது. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் சோபிக்காமல் ரசிகர்களை ஏமாற்றி வந்த ஹாரி ப்ரூக் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி தனது இன்னிங்ஸை தொடங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ப்ரூக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிதள்ளினார். 

அதேசமயம் மறுமுனையில் மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்ட்ரே ரஸலின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ராகுல் திரிபாதியும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ப்ரூக்குடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ப்ரூக் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் மார்க்ரமும் அரைசதம் கடந்த நிலையில், 5 சிக்சர்கள், 2 பவுண்டரி என 50 ரன்களைச் சேர்த்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்த்து ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரீ ப்ரூக் 55 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பதிவுசெய்யப்பட்ட முதல் சதமாகவும் இது அமைந்தது.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி ப்ரூக் 55 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 100 ரன்களைச் சேர்த்திருந்தார். கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை