டி20 கிரிக்கெட்டில் கோலியைப் பின்னுக்கு தள்ளி சாதனைப்படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதன் பிறகு விருத்திமான் சகா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். சகா 47 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த அபினவ் மனோகர் 3 ரன்னிலும், விஜய் சங்கர் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 66 ரன்கள் சேர்த்தார். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. இதில் கைல் மேயர்ஸ் 24 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் ராகுல் சிறப்பாக ஆடினர். ஆனால் அவரும் 68 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கையிலிருந்து வெற்றியை 7 ரன்களில் குஜராத்திடம் தாரவார்த்தது.
இருப்பினும் இப்போட்டியின் மூலம் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில், 14 ரன்கள் எடுத்திருந்த போது டி20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்தார். அதுவும் 197 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 212 இன்னிங்ஸிலும், ஷிகர் தவான் 246 இன்னிங்ஸிலும், சுரேஷ் ரெய்னா 251 இன்னிங்ஸிலும், ரோஹித் சர்மா 258 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
இதுவரையில் 210 போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 6 சதங்கள், 66 அரைசதங்கள் உள்பட 7000 ரன்களை அடித்துள்ளார். இதன் காரணமாக விராட் கோலி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளிய குறைந்த இன்னிங்ஸிலி 7000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார்.