ஐபிஎல் 2023: ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!

Updated: Wed, Apr 26 2023 23:14 IST
IPL 2023: Kolkata Knight Riders defeat Royal Challengers Bangalore twice! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.  அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் - ஜெகதீசன் இணை களமிறங்கினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்த ஜேசன் ராயும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.  இதையடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதிஷ் ரானா இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ரானா 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் வநிந்து ஹசரங்காவிடம் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 31 ரன்களை எடுத்த நிலையில் வநிந்து ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சருமாக விளாசினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.  அடுத்து களமிறங்கிய டேவிட் வைஸ் தனது பங்கிற்கு 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ஹசரங்கா, விஜய்குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கியது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஃபாஸ் அஹ்மத், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்த மஹிபால் லாம்ரொர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். பின் 34 ரன்களில் லாம்ரொர் விக்கெட்டை இழக்க, 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு நம்பிக்கையளித்து வந்த விராட் கோலியும் வெங்கடேஷ் ஐயரின் சிறப்பான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து வந்த சுயாஷ் பிரபுதேசய் 10 ரன்களிலும், வநிந்து ஹசரங்கா 5 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் 22 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த வீரர்களாலும் இலக்கை எட்டமுடியவில்லை. 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையு, சுயாஷ் சர்மா, ஆண்ட்ரே ரஸல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் கேகேகார் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை