ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; ராஜஸ்தானுக்கு 172 டார்கெட்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 60ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டூ பிளெசிஸுடன் இணைந்த கிளென் மேக்ஸ்வெல்லும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 55 ரன்களில் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மஹிபால் லோமரோர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்லும் 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் அனுஜ் ராவத் அடுத்தடுத்து இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆடம் ஸாம்பா, கேஎம் ஆசிஃப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.