ரஹானே, ராயுடுவை கட்டம் கட்டி தூக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைக் குவித்தது. இதில் அபாரமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஷ்வால் 77 ரன்களையும், துருவ் ஜுரெல் 34 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து அஜிங்கியா ரஹானே களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது ஆட்டத்தின் 11ஆவது ஓவரை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த ஓவரின் முதல் பந்திலேயே அஜிங்கியா ரஹானேவை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடு சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரவிச்சந்திரன் ஆஸ்வின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்டத்தையும் ராஜஸ்தான் அணி பக்கம் திரும்பினார்.
இந்நிலையில் ஒரே ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணோளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.