ஐபிஎல் 2023: தாண்டவமாடிய ஷர்துல்; இமாலய இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், மந்தீப் சிங் ரன்கள் ஏதுமின்றியும் டேவிட் வில்லியின் அடுத்தடுத்த பந்துகளில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் நிதீஷ் ரானா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 57 ரன்களைச் சேர்த்திருந்த குர்பாஸ் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸல் களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க முயற்சித்து கரன் சர்மா பந்துவீச்சில் விராட் கோலியிடன் கேட்ச் கொடுத்த கோல்டன் டக் ஆனார். அத்னபின் ரிங்கு சிங்குடன் இணைந்த ஷர்துல் தாக்கூர் யாரும் எதிர்பாராத ஒரு இன்னிங்ஸை விளையாடி மிரளவைத்தார்.
ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்களை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி தள்ளிய ஷர்துல் தாக்கூர் 20 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவருடன் இணைந்து விளையாடிய ரிங்கு சிங்கும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 68 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் கேகேஆர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் டேவிட் வில்லி, கரண் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.