ஐபிஎல் 2023: சூர்யா மிரட்டல் சதம்; 218 ரன்களை குவித்தது மும்பை!

Updated: Fri, May 12 2023 21:30 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அதன்படி இன்று நடைபெற்றுவரும் 57ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் 29 ரன்களில் ரோஹித் சர்மாவும், இஷான் கிஷன் 31 ரன்களிலும் என அடுத்தடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் இருந்த நேஹல் வதேரா 15 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடிய விஷ்னூ வினோத் 30 ரன்களிலும், டிம் டேவிட் 5 ரன்களிலும் என ரஷித் கானின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய் சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.  அத்துடன் நிறுத்தாமல் களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 103 ரன்களைச் சேர்த்தார். குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை