ஐபிஎல் 2023: தடுமாறிய மும்பை; காப்பாற்றிய திலக் வர்மா!

Updated: Sun, Apr 02 2023 21:30 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இஷான் கிஷான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடந்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அணியின் ஸ்கோரை உயர்த்த, அவருடன் இணைந்த நெஹல் வதேராவும் அதிரடி காட்டத் தொடங்கினார். 

பின் கரண் சர்மா 14ஆவது ஓவரில் வதேரே அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர்களை பற்றகவிட்டு அசத்தினாலும், மூன்றாவதாக சிக்சர் அடிக்கும் முயற்சியில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிடும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்சர்கள் என 84 ரன்களையும், அர்ஷத் கான் 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை