பிரித்வி ஷாவின் உண்மை முகத்தை பார்ப்பீர்கள் - ரிக்கி பாண்டிங் வார்னிங்!
இந்திய அண்டர் 19 அணியின் கிரிக்கெட் கேப்டனாக உலகக்கோப்பையை வென்ற இளம் வீரர் பிரித்வி ஷா, அடுத்த முக்கிய வீரராக உருவெடுப்பார் என்று கிரிக்கெட் உலகம் கணித்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து ப்ரித்வி ஷாவிற்கு அவ்வளவு சிறப்பான அனுபவம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் இடியாக விழுந்தது. அதில் இருந்து மீண்டு வர உள்ளூர் கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா சாதனை மேல் சாதனை படைத்தும் இதுவரை மீண்டும் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ரித்வி ஷா சிறப்பான பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தொடக்க வீரரான ப்ரித்வி ஷாவிற்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி அணியின் முக்கிய வீரரான பிரித்வி ஷா குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “என்சிஏ அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ப்ரித்வி ஷா, டெல்லி அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நான் பார்த்த ப்ரித்வி ஷாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ப்ரித்வி ஷாவை பார்க்கிறேன். அவரது உடல்தகுதியில் அதிக கவனம் கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் அவரிடம் பேசும் போது, எந்த அடிப்படையில் பயிற்சியில் ஈடுபடுகிறார் என்பது ஆச்சரியத்தை கொடுத்தது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ப்ரித்வி ஷாவிற்கு மிகப்பெரிய ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ப்ரித்வி ஷாவின் கண்களில் ஒரு காட்டுப்பசி தெரிகிறது. அதனால் நடப்பாண்டில் அவரது பேட்டிங் வேறு மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் ப்ரித்வி ஷாவின் திறமை மற்றும் ஆட்டத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் ப்ரித்வி ஷாவின் உண்மையான முகம் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெளியில் வரும்” என்று தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 595 ரன்களை ப்ரித்வி ஷா விளாசியுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரிலும் அந்த ஃபார்மை தொடருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.