யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை புகழந்து தள்ளிய விராட் கோலி!

Updated: Thu, May 11 2023 22:59 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பாக யுஷ்வேந்திர சாஹல் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து ராஜஸ்தான் அணி சார்பாக இளம் அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் - பட்லர் இணை தொடக்கம் கொடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் முதல் ஓவரை கேப்டன் நிதிஷ் ராணாவே வீசினார். இந்த நிலையில் முதல் இரு பந்துகளில் அதிரடியாக சிக்சர் விளாசி ஜெய்ஸ்வால் மிரள வைத்தார். இதையடுத்து 3 பவுண்டரிகளை விளாசிய ஜெய்ஸ்வால், அந்த ஓவரில் மட்டும் 26 ரன்களை விளாசி தள்ளினார்.

இதன்பின்னர் மீண்டும் 3ஆவது ஓவரில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன் மூலம் 13 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். ஜெய்ஸ்வால் அதிரடியை ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி, "கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுதான்.. மிகச்சிறந்த திறமையாளர் ஜெய்ஸ்வால்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ஜெய்ஸ்வால், தற்போது அதிவேக அரைசதம் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஷ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 98 ரன்களைச் சேர்த்து 2 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார். இருப்பினும் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை