இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 17ஆவது சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற குயின்டன் டி காக் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 3 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததைப் போன்று இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய அணியின் துணைக்கேப்டன் நிக்கோலஸ் பூரனும் தனது முதல் பந்திலேயே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்களை எடுத்து குல்தீப் யாதவின் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 10 ரன்களுக்கும், குர்னால் பாண்டியா 03 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த அணியின் இளம் வீரர்கள் ஆயூஷ் பதோனி - அர்ஷத் கான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 8ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆயூஷ் பதோனி 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 55 ரன்களையும், அர்ஷத் கான் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வழக்கம் போல் டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பிரித்வி ஷா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார். அதேசமயம் மறுமுனையில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் விளாசி தனது வருகையைப் பதிவுசெய்தார். 

அதனுடன் அடுத்த ஓவரிலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதன்மூலம் டெல்லி அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 32 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் அறிமுக ஜேக் ஃபிரெசர் குர்னால் பாண்டியா ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி மிரட்டியதுடன், 31 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரிஷப் பந்தும் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியையும் ஏறத்தாழ உறுதிசெய்தார். பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ஷாய் ஹோப் இணை நிதானமாக விளையாடிய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். 

இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸட்ப்ஸ் 15 ரன்களையும், ஷாய் ஹோப் 11 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 2ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 9அம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News