ஒரே ஓவரில் சன்ரைசர்ஸ் அஸ்திவாரத்தை சரித்த அர்ஷ்தீப் சிங் - காணொளி!

Updated: Tue, Apr 09 2024 20:16 IST
ஒரே ஓவரில் சன்ரைசர்ஸ் அஸ்திவாரத்தை சரித்த அர்ஷ்தீப் சிங் - காணொளி! (Image Source: Google)

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காகிசோ ரபாடா விசீய முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். 

ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அதனை சரியாக கணிக்க தவறி சக வீரர்களிடம் அவுட் இல்லை என தெரிவிக்க பஞ்சாப் அணி வீரர்களும் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர ஆரம்பத்தினர். ஆனால் அந்த ஓவரின் இறுதியின் போது பெரிய திரையில் பந்து டிராவிஸ் ஹெட்டின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரியவந்தது. இதனை கண்ட பஞ்சாப் அணி வீரர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். 

அதன்பின் அதிரடியாக விளையாட தொடங்கிய டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களைச் சேர்த்த நிலையில் அர்ஷதீப் சிங் பந்தை அடிக்க முயன்று ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் அதே ஓவரில் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

 

இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 27 ரன்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத் தொடர்ந்து அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவும் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி பவர்பிளே ஓவர்களுக்குளேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை