மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பந்து வீசுவது மிகவும் முக்கியம் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Sun, Apr 14 2024 20:45 IST
மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பந்து வீசுவது மிகவும் முக்கியம் - ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய கேகேஆர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்க வில்லை. அதிரடி வீரர்கள் சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு மொஹ்சின் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த பில் சால்ட் 89 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கேகேஆர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசியும், சிறப்பான பந்துவீச்சையும் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக மைதானம் மொதுவாக இருக்கும் சமயத்தில் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றவாரு பந்துவீசுவது என்பது மிகவும் முக்கியம். அதில் நாங்கள் அபாரமாக செயல்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். 

நாங்கள் ஒவ்வொரு முறையும் விக்கெட்டுகளை கைப்பற்றிய போது அது எங்களுக்கு உத்வேகத்தை அளித்து எதிரணியை அழுத்தத்தில் வைக்க உதவியது. இன்றைய போட்டியில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் மிகவும் அபாரமானது. இது ஒரு வேடிக்கையான தொடர் என்றும், முடிந்தவரை நாம் முன்னிலையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்துவேன்.  அதேபோல் இந்த வெற்றியை தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை