பவர்பிளேவில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!

Updated: Sun, May 05 2024 14:25 IST
பவர்பிளேவில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்! (Image Source: Google)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இதில் அதிகபட்சமாக ஷாருக் கான் 37 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயாள், முகமது சிராஜ், வைசாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இப்போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் வில் ஜேக்ஸ், கேமரூன் க்ரீன், ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் ஆர்சிபி அணி 116 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும், அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஸ்வப்நில் சிங் இணை இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் 21 ரன்களையும், ஸ்வப்நில் சிங் 15 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய ஷுப்மன் கில், “இன்றைய போட்டியில் மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை முதல் இரண்டு ஓவர்களில் பார்க்க நினைத்தோம். அதன் பிறகு அதில் கிடைக்கும் ஐடியாவை வைத்து விளையாட வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. இந்த மைதானத்தில் 170 முதல் 180 ரன்கள் வரை அடித்திருந்தால் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். நாங்கள் பவர் பிளேவில் பேட்டிங் செய்த விதமும், பவர் பிளேவில் பந்து வீசிய விதமும் மோசமாக இருந்ததாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது.

மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக நாங்கள் இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனை களமிறக்கினோம். இதனால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரையும் நாங்கள் இழந்து விட்டோம். இத்தோல்வி குறித்து அதிகம் யோசிக்காமல் அடுத்த போட்டியில் புதிதாக ஆரம்பிப்பது போல் ஆரம்பிக்க உள்ளோம். இந்த தோல்வி எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இதிலிருந்து கற்றுக்கொண்டதை வைத்தும், எங்களது தவறுகளை திருத்திக்கொண்டும் நாங்கள் கம்பேக் கொடுப்போம். ஏனெனில் இனிவரும் நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை