நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நடப்பு ஐபிஎல் சீசனின் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, வில் ஜேக்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ராஜத் பட்டிதார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். இதில் ராஜத் பட்டிதார் 50 ரன்களில் ஆட்டமிழக்க, டூ பிளெசிஸும் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி இந்த இலக்கை எட்டியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 ஓவர்களை வீசிய பும்ரா, 21 ரன்களை கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் ஒடுத்து அசத்தினர். இதில் இஷான் கிஷான் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 69 ரன்களில் இஷான் கிஷான் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் தனது கம்பேக் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 17 பந்துகளில் அரைசதம் கடந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுப்பக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், பும்ரா எங்கள் அணியில் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “மும்பை அணிக்கு எதிரான இந்த தோல்வியை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். முதலில் இப்போட்டியில் டாஸை நான் வென்றிருக்க வேண்டும். இரண்டாவது மும்பை அணி சிறப்பாக விளையாடி எங்களை அழுத்தத்திலேயே வைத்திருந்தார்கள். அதேபோல் நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம்.
இப்போட்டியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என்பதால், அதனால் 250 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் 196 ரன்கள் மிகவும் குறைவானது என்பதை மும்பை அணியினர் நிரூபித்துவிட்டார்கள். ஈரப்பதம் இருக்கும் என்று அறிந்திருக்கும் சூழலில், நிச்சயம் பெரிய இலக்கை அடித்திருக்க வேண்டும். . நானும் பட்டிதர் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த போது, மும்பை அணி சரியான கம்பேக் கொடுத்தது.
ஜஸ்பிரித் பும்ரா கைகளில் எப்போதெல்லாம் பந்து கொடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அழுத்தமான நேரங்களில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். பும்ரா எங்கள் அணியில் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். நாங்கள் அடுத்தடுத்த போட்டியில் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய வழிகளை ஆராய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.