இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோவ்மன் பாவெலின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வந்த விராட் கோலியும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் ராஜத் பட்டிதார் இணை பொறுப்பாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தி வந்தனர். ஒருகட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 27 ரன்கள் எடுத்திருந்த கேமரூன் க்ரீனும், அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணியும் 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜத் பட்டிதாரும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்த நிலையில், மூன்றாம் நடுவரின் தவறான முடிவின் காரணமாக நாட் அவுட் என்ற தீர்ப்பினால் களத்தில் நீடித்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாம் நடுவர்களின் தீர்பானது தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் மஹிபால் லாம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும், அதிரடியாக விளையாடிய மஹிபல் லாம்ரோர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களிலும் என ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்வப்நில், கரன் சர்மா ஆகியோர் பவுண்டரிகளை அடிக்க 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - டாம் கொஹ்லர் காட்மோர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களைச் சேர்த்திருந்த டாம் கொஹ்லர் காட்மோர் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

Advertisement

ஒருகட்டத்தில் இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களைத்தொடர்ந்து ரியன் பராக் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் 8 ரன்களை எடுத்திருந்த துருவ் ஜூரெல் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் எதிர்பாராத வகையில் நூழிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்ப, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் இணைந்த ரியான் பராக் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஷிம்ரான் ஹெட்மையரும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

அதன்பின் இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை ஆர்சிபி தரப்பில் லோக்கி ஃபெர்குசன் வீச, அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் ரோவ்மன் பாவெல் பவுண்டரி அடித்து அணியின் அழுத்தத்தைக் குறைத்தார். அதன்பின் அந்த ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News