ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

Advertisement

இதில் அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின், டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியதுடன், இருவரும ரைசதம் கடந்தும் அசத்தினர். பின்  டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 42 ரன்களையும், மறுபக்கம் நிதீஷ் ரெட்டி 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை விளாசி 76 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த யஷாஸ்வி ஜெய்ஸ்வால் - ரியான் பராக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 77 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலுவான நிலையில் இருந்ததால் எளிதாக இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோவ்மன் பாவெல் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், கடைசி பந்தில் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய புவனேஷ்வர் குமார், “களத்தில் எப்போதும் பொருமையாக இருப்பது எனது இயல்பு என நினைக்கிறேன். அதனால் நான் முடிவை பற்றி எதையும் நினைக்காமல் கடைசி ஓவரை வீச சென்றேன். அந்த ஓவரில் நாங்கள் பெரிதாக எதையும் விவாதிக்கவில்லை. 

நான் எனது செயல்முறையில் மட்டும் கவனம் செலுத்தினேன். குறிப்பாக கடைசி 2 பந்துகளுக்கு போட்டியை எடுத்துச் சென்றால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்தேன். அதனால் நான் அதிகம் யோசிக்கவில்லை. இன்றைய தினம் எங்கள் நல்ல ஸ்விங் கிடைத்தது. அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஸ்விங் கிடைக்கும் போது நீங்கள் விக்கெட் எடுக்க முயற்சிக்கலாம். அதிர்ஷ்டவசமாக அதில் எனக்கு விக்கெட்டுகளும் கிடைத்தன” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News