ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய மெக்குர்க்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் முதல் ஓவரில் பந்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாலும், அதன்பின் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். அதிலும் குறிப்பாக ஆவேஷ் கான் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களுமாக விளாசித்தள்ளியதுடன், 19 பந்துகளில் தந்து அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். அதிலும் அந்த ஓவரின் முதல் மூன்று பந்தை பவுண்டரி அடித்த மெக்குர்க், 4ஆவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
அதனைத்தொடர்ந்து 5ஆவது பந்தை பவுண்டரிக்கும், கடைசி பந்தில் சிக்ஸரையும் விளாசி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வந்த மெக்குர்க் 20 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்களை குவித்தது.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷாய் ஹோப் ஒரு ரன்னிலும், அக்ஸர் படேல் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் போரல் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இந்நிலையில் ஆவேஷ் கான் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்ததுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்கின் காணொளி வைரலாகி வருகிறது.