ஐபிஎல் 2024: நரைன், சக்ரவர்த்தி அசத்தல்; லக்னோவை பந்தாடியது கேகேஆர்!

Updated: Sun, May 05 2024 23:28 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம் போல் சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் எடுத்திருந்த பில் சால்ட் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சுனில் நரைன் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் சதத்தை நெருங்கிய நிலையில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 81 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைதொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்ப, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அங்கிரிஷ் ரகுனஷியும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து ரிங்கு சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்திருந்த ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த ரமந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்ஷின் குல்கர்னி 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிக்ஸர் விளாசி தனது கணக்கை தொடங்கினார். ராகுல் - ஸ்டொய்னிஸ் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை எட்டியது. அதன்பின் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் கேஎல் ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் அதிரடியாக விளையாட முயற்சித்து 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 10 ரன்களுக்கும், ஆயூஷ் பதோனி 16 ரன்களுக்கும், அதிரடியாக விளையாடிய ஆஷ்டன் டர்னர் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் லக்னோ அணி 125 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழது தடுமாறியது. 

அதனைத்தொடர்ந்து குர்னால் பாண்டியா, யுத்விர் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 16.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியதுடன், ஐபிஎல் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை