இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. 

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் 8 ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் கேஎல் ராகுலுடன் இணைந்த ஆயுஷ் பதோனியும் சிறப்பான ஆஅட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் அதிரடியாக தொடங்கிய நிலையில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆயுஷ் பதோனியும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களை எடுத்து நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - குர்னால் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 7 ரன்களையும், அர்ஷத் கான் 5 ரன்களையும் எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி கேகேஆர் அணி விளையாடவுள்ளது.  பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷமார் ஜோசப் தனது முதல் ஓவரிலேயே 22 ரன்களைக் கொடுத்தார். ஆனால் அதில் பெரும்பாலான ரன்கள் அனைத்தும் எக்ஸ்ட்ரா ரன்களாக மட்டுமே அமைந்தது. பின் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மோஹ்சின் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பில் சால்டுடன் இணைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் சால்ட் - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களையும் சேர்த்ததன் மூலம் கேகேஆர் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News