முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் - காணொளி!

Updated: Fri, Apr 12 2024 20:48 IST
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் - காணொளி! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து டெல்லி அணியை பந்துவீச அழைத்தார்.

இதனையடுத்து பேட்டிங்கைத் தொடர்ந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 3 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் இன்னிங்ஸைத் தொடர்ந்தார். இந்நிலையில் இப்போட்டியின் 8ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீச அதனை எதிர்கொண்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை சரியாக கணிக்க தவறினார். இதனால் பந்து அவரது பேட்டில் பட்டு பாய்ண்ட் திசையில் இருந்த இஷான் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் துணைக்கேப்டன் நிக்கோலஸ் பூரன் சந்தித்த முதல் பந்திலேயே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் கேஎல் ராகுலும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவின் அடுத்த ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். 

 

பின்னர் இப்போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய தீபக் ஹூடா 10 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, லக்னோ அணியானது 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை