இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா வெறும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத்தொடர்ந்து நிதானமாக விளையாடிய திலக் வர்மா தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளேவில் மட்டுமே 4 விக்கெட்டுகளை இழந்ததுடன், 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் இஷான் கிஷனுடன் இணைந்த நெஹால் வதேரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் இஷான் கிஷன் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேஹால் வதேரா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய முகமது நபியும் ஒரு ரன்னோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் மொஹ்சின் கான் 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னி, நவீன் உல் ஹக், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் 28 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடாவும் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்து தருவார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் 7 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் திலக் வர்மாவின் சிறப்பான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஷ்டன் டர்னரும் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, லக்னோ அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், சர்ச்சையான முறையில் ஆயூஷ் பதோனியும் ரன் அவுட்டானார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் 14 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News