ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா!

Updated: Sat, Mar 23 2024 16:56 IST
ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 

இப்போட்டியும் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

முன்னதாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் மதீஷா பதிரனா இடம்பிடித்திருந்தார். அப்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரின்போது பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக பதிரானா குணமடையாததால், ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியானது.

இதனையடுத்து அவர் தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இருப்பினும் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வந்த பதிரனா, சிஎஸ்கே அணி 5ஆவது முறை கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவரது வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), அஜிங்கியா ரகானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல், ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர், மதிஷா தீக்ஷனா, மதிஷா பதிரனா, முகேஷ் சௌத்திரி, முஸ்தஃபிஸூர் ரஹ்மான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர், அவினாஷ் ராவ் ஆரவலி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை