இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து மூன்றாபது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். 

Advertisement

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 78 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சாம் கரண் பந்துவீச்சில் பிரப்ஷிம்ரன் சிங்கின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடும் முயற்சியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இறுதியில் திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் டிம் டேவிட் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் சாம் கரண் - பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரப்ஷிம்ரன் சிங் சந்தித்த முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ஒரு ரன்னிலும், கேப்டன் சாம் கரன் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து ஜஸ்ப்ரித் பும்ராவின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் பாடியா - ஷஷாங்க் சிங் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். ஆனால் அவர்களாலும் நீண்ட நேரம் விக்கெட் இழப்பை தடுக்க முடியவில்லை. இதில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ப்ரீத் பாட்டியா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மாவும் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த பஞ்சாப் அணியின் ஆட்டநாயகர்கள் ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

இதனால் சரிவிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியை மீட்ட இந்த தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். ஒருகட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதாக வெற்றியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களைச் சேர்த்திருந்த ஷஷாங்க் சிங் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் மறுமுனையில் தனது அதிரடியை கைவிடாமல் விளையாடிய அஷுதோஷ் சர்மா 23 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மா 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 61 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இறுதிக்கட்டத்தில் அணியின் நம்பிக்கையாக இருந்த ஹர்ப்ரீத் பிரார் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டிற்கு காளமிறங்கிய காகிசோ ரபாடா முதல் பந்தையே சிக்ஸர் அடித்து மிரட்டினார். 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ்  தரப்பில் கடைசி ஓவரை ஆகாஷ் மத்வால் வீச அந்த ஓவரில் காகிசோ ரபாடா ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்ப்ரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News