ஐபிஎல் 2024: வானவேடிக்கை காட்டிய பேட்டர்கள்; ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Thu, Apr 11 2024 23:17 IST
ஐபிஎல் 2024: வானவேடிக்கை காட்டிய பேட்டர்கள்; ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும், நட்சத்திர வீரர் விராட் கோலியும் தொடக்கம் கொடுத்தனர்.

இதில் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி இப்போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் அதிரடியாக தொடங்கினாலும் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் டூ பிளெசிஸுடன் இணைந்த ராஜத் பட்டிதார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். 

குறிப்பாக நடப்பு சீசனில் பெரிதளவில் சோபிக்க தவறிய ராஜத் பட்டிதார் இப்போட்டியில் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் கிளென் மேக்ஸ்வெல் இப்போட்டியிலும் சொற்ப ரன்னிறி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அவருக்கு துணையாக விளையாடிய தினேஷ் கார்த்திக், ஆகாஷ் மத்வால் வீசிய ஓரே ஓவரில் அடுதடுத்து 4 பவுண்டரிகளை விளாசி மிராட்டினார். இதனால் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்திருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே மஹிபால் லாம்ரோரும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.  அதன்பின் களமிறங்கிய சௌரவ் சௌகான் மற்றும் வைஷாக் விஜயகுமார் ஆகியோரும் அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளிய தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களைக் குவித்தது. அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 69 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வானவேடிக்கை நிகழ்த்தினார்.

அதேசமயம் ரோஹித் சர்மாவும் தனது பங்கிற்கு சில சிக்ஸர்களை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன் மூலம் மும்பை அணியின் வெற்றியும் எளிதானது. பின் ஆட்டத்தை முடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின் இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை