ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : கேகேஆர் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேற்றம்!

Updated: Sat, Apr 27 2024 13:50 IST
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : கேகேஆர் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேற்றம்! (Image Source: Google)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். 

இதில் சுனில் நரைன் 23 பந்துகளிலும், பிலிப் சால்ட் 25 பந்துகளிலும் என அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரைன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்த நிலையில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்களையும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய பிரப்ஷிம்ரன் சிங் 18 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - ஷஷாங்க் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்தும், ஷஷாங்க் சிங் அரைசதம் அடித்தும் அசத்தினர். இதில் பேர்ஸ்டோவ் 108 ரன்களையும், ஷஷாங்க் சிங் 68 ரன்களை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதன்படி இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்விகளைச் சந்தித்து 6 புள்ளிகளுடன் பட்டியலின் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் கேகேஆர் அணி இந்த சீசனில் தங்களது மூன்றாவது தோல்வியைச் சந்தித்துள்ளது. 

அதன்படி கேகேஆர் அணி நடப்பு சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 9ஆம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் தொடர்கின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை