ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னேற்றம்!

Updated: Sun, Mar 31 2024 13:40 IST
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னேற்றம்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் இணை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையிலும், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னேற்றம் கண்டுள்ளது. அதன்படி இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளைப் பெற்று ரன் ரேட் அடிப்படையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் தோல்வியை தழுவிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 6ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. 

 

இந்த பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தையும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. அதேசமயம் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை