ரஸல் தனது முதல் ஓவரிலேயே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Sun, Apr 21 2024 22:27 IST
ரஸல் தனது முதல் ஓவரிலேயே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார் - ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பில் சால்ட் 48 ரன்களையும் சேர்த்தனர். 

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி இறுதிவரை போராடிய நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 55 ரன்களையும், ராஜத் பட்டிதார் 52 ரன்களையும் சேர்த்திருந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் நரைன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தில் தொடர்கிறது. இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆண்ட்ரே ரஸல் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இதுபோன்று நேருக்கமான போட்டிகளில் உங்களது முடிவுகள் மற்றும் செயல்திறனானது முழுவதுமாக உங்களை விட்டு வெளியேற்றுகிறது, ஏனெனில் நீங்கள் பல உணர்ச்சிகளைக் கடந்து செல்கிறீர்கள். இதுபோன்ற சூழலில் அமைதியாக இருப்பது கடினம், ஆனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். ஏனெனில் நாங்கள் இந்த வெற்றியின் மூலம் மேலும் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளோம், தற்போது அதுதான் முக்கியம்.

போட்டியில் அழுத்தம் இருக்கும்போது அது மிகவும் கடினமானதாக இருக்கும். அதனால் ஒவ்வொரு வீரரும் தங்கள் கைகளை உயர்த்தி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போட்டியில் ஆண்ட்ரே ரஸல் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பினார். இந்த மாதிரியான அணுகுமுறை தான் அணியில் தேவை.

இன்றைய போட்டியில் நான் கடைசி வரை களத்தில் இருந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தேன். ஏனெனில் அச்சமயத்தில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தோம், நான் கடைசி வரை களத்தில் இருக்க விரும்பினேன். இறுதியில் ரமந்தீப் சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக விளையாடி எங்களுக்கு தேவையான ரன்களைச் செர்த்தனர். அதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை