ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதென அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிரடி தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் அபிஷேக் சர்மா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த நிதீஷ் ரெட்டி மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ராகுல் திரிபாதி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.

Advertisement

பின் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ராகுல் திரிபாதி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து இணைந்த் நிதீஷ் ரெட்டி - அப்துல் ஷமாத் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் 19 பந்துகளிலேயே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

பின் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களை எடுத்திருந்த அப்துல் சமத் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 64 ரன்களை எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறுதிதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாஸ் அஹ்மத் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார்.  இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷபாஸ் அஹ்மத் ஒருபவுண்டரி, ஒரு சிக்சர் என 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. 

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், சாம் கரன், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறக்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங்கும் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் ஷிகர் தவான் 14 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசெனின் அபாரமான ஸ்டம்பிங்கின் மூலம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த சாம் கரண் - சிக்கந்தர் ரஸா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர். பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் கரன் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 28 ரன்களை எடுத்திருந்த சிக்கந்தர் ரஸாவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் வந்த ஜிதேஷ் சர்மாவும் வழக்கம் போல் சோபிக்க தவறி விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது. அதன்பின் இணைந்த கடந்த போட்டியின் ஆட்டநாயகர்கள் ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை இப்போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்ல போராடினர். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 39 ரன்கள் தேவை என்ர இக்கட்டான சூழ்நிலை உருவானது. இதில் நடராஜன் வீசிய 19ஆவது ஓவரில் இருவரும் இணைந்து 10 ரன்களை மட்டுமே சேர்த்தனர். இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

இப்போட்டியின் கடைசி ஓவரை சன்ரைசர்ஸ் அணி தரப்பில் ஜெய்தேவ் உனாத்கட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஷுதோஷ் சர்மா சிக்சர் விளாச, அடுத்த இரண்டு பந்துகளும் வைட் பந்துகளாக வீசினார் உனாத்கட். அதன்பின் அந்த ஓவரின் இரண்டாவது பந்தையும் சிக்சருக்கு விளாசிய அஷுதோஷ், அடுத்தடுத்த பந்துகளில் தலா 2 ரன்களைச் சேர்த்தார். இதனால் கடைசி இரண்டு பந்துக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டு வைட் வீசினார் உனாத்கட். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.  அதன்பின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷஷாங்க் சிங் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்தார்.

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் இறுதிவரை போராடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 46 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News