17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். பின் அதிரடியாக விளையாட முயற்சி செய்த கேன் வில்லியம்சன் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷன் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

அவருக்கு துணையாக அதுவரை நிதானம் காத்த ஷுப்மன் கில்லும் பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் கேப்டனாக ஷுப்மன் கில் அடிக்கும் முதல் அரைசதமும் இதுதான். 

பின்னர் தொடர்ந்து ஷுப்மன் கில் ஒருமுனையில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச மறுபக்கம் களமிறங்கிய விஜய் சங்கர் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து மீண்டும் சொதப்பினார். அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களை மட்டுமே சேர்த்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவேத்தியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் முதல் ஓவரிலேயே அடுத்து 3 பவுண்டரிகளை விளாசி தொடக்கம் கொடுத்தார்.

அதன்பின் இரண்டாவது ஓவரை உமேஷ் யாதவ் வீச, அதனை எதிகொண்ட ஷிகர் தவான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த பேர்ஸ்டோவ் - பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்ஷிம்ரன் சிங் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சாம் கரண் 5 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா 15 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர்  ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் - ஜிதேஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் ரஷித் கானின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா, அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்க முயற்சித்து 16 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறன்கிய அஷுதோஷ் சர்மாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் அதிரடியாக விளையாடி வர, கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீச, அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரி அடிக்க நினைத்த அஷுதோஷ் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஆட்டத்தின் பரப்பரப்பு கூடியது.

ஆனாலும் மறுபக்கம் எந்த பதற்றமும் இல்லாம் விளையாடி வந்த ஷஷாங்க் சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News