ஐபிஎல் 2024: பந்துவீச அதிக நேரம்; ராகுல், கெய்க்வாட்டிற்கு அபராதம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த அஜிங்கிய ரஹானே - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அஜிங்கியா ரஹானே 36 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே, சமீர் ரிஸ்வி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மொயீன் அலியும் 30 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 3 பவுண்ட்ரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான் ரன்களைச் சேர்த்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ரகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின், டி காக் 54 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 82 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், நிக்கோலஸ் பூரன் 23 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணி கேப்டன்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டனர். இதனால் அந்த அணிகளின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு அபராதம் விதித்து ஐபிஎல் நிரவாக குழு உத்திரவிட்டுள்ளது.
அந்தவகையில் இருவரும் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக இத்தவறை செய்துள்ளதால் இருவருக்கும் தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் இத்தவறை செய்யும் பட்சத்தில் இந்த அபராத தொகையானது இரட்டிப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.