17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் விருத்திமான் சஹா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் ஷுப்மன் கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்ததன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்பிளே முடிவில் 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்து தூக்கி அடித்த ஷுப்மன் கில் 16 ரன்களோடு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷாரூக் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாரூக் கான் 25 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த ஷாரூக் கான் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்ஷன் தனது 6ஆவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருக்கு துணையாக டேவிட் மில்லரும் பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் 200 ரன்களை எட்டியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்ஷன் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 84 ரன்களையும், டேவிட் மில்லர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஸ்வப்நில் சிங், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒரு பவுண்டரி, 3 சிஸர்களுடன் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த வில் ஜேக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுபக்கம் விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அதுவரை நிதானம் காட்டி வந்த வில் ஜேக்ஸ் அதன்பின் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசித்தள்ளினார். இப்போட்டியில் அவரும் 31 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், பின்னர் ருத்ரதாண்டவமாடினார். அதிலும் குறிப்பாக 15 ஆவது ஓவரை மோஹித் சர்மா வீச, அதில் 29 ரன்களையும், ரஷித் கான் வீசிய 16ஆவது ஓவரில் 29 ரன்களையும் என விளாசித் தள்ளி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

Advertisement

இப்போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதிலும், சிக்ஸர் அடித்து தனது சதத்தைப் பதிவுசெய்த ஜேக்ஸ் இன்னிங்ஸையும் முடித்து வைத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில் ஜேக்ஸ் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 100 ரன்களையும், விராட் கோலி 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களையும் சேர்த்தனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News