டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப், அக்ஸர், ஸ்டப்ஸை தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ரிஷப் பந்த், அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரிஷப் பந்த் தக்கவைக்கப்படுவாரா இல்லையா என்பது குறித்து பல யூகங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதற்கான பதிலை காலம் தன் சொல்லும். ஆனால் நான் அங்கு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், நான் அவரைத் தக்கவைத்திருப்பேன். ரிஷப் பந்தை தக்கவைக்க வேண்டும். அக்சர் படேலை தக்கவைக்க வேண்டும். டிரிஸ்டன் ஸ்டப்ஸை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தக்கவைக்கப்படும் 4ஆவது வீரராக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இருப்பார் என்று நம்புகிறேன். மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தக்கவைக்க விரும்பும் 5வது வீரராக மிட்செல் மார்ஷ் இருக்கலாம். அதைத் தவிர, அந்த அணி நிர்வாகம் வேறு எந்த வீரரையும் தக்கவைக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரையில் இந்த 5 வீரர்களில் குறைந்தது 4 பேரையாவது டெல்லி கேப்பிட்டல்ஸ் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஹர்பஜன் சிங் கூறியதைப் போலவே ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. கார் விபத்திற்கு பிறகு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ரிஷப் பந்த், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.