ஐபிஎல் 2025: சுதர்ஷன், கில் அசத்தல்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் அபார வெற்றி!

Updated: Sun, May 18 2025 23:10 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபாஃப் டூ பிளெசிஸ் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேஎல் ராகுலுடன் இணைந்த அபிஷேக் போரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

இதில் அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அபிஷேக் போரல் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் அக்ஸர் படேலும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து ஒருபக்கம் கேஎல் ராகுல் சதத்தை நோக்கி விளையாடி வந்த நிலையில் மறுபக்கம் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

அதேசமயம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. குஜராத் தரப்பில் அர்ஷத் கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மேற்கொண்டு இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களின் அரைசதங்களை பூர்த்தி செய்து அசத்தியதுடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தனர். இதில் சாய் சுதர்ஷன் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என 93 ரன்களையும் சேர்த்ததுடன், 205 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை