ஐபிஎல் 2025: பயிற்சி ஆட்டத்தில் 37 பந்துகளில் சதமடித்த மெக்குர்க் - காணொளி
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதியில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இம்முறை அக்ஸர் படேல் தலைமையில், தங்களின் முதல் கோப்பையை வெல்லும் முயற்சியில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக அந்த அணி பல்வேறு மாற்றங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட அனைத்தையும் மாற்றி ஒரு புதிய அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் அவர் பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டதுடன் 37 பந்துகளில் தானது சதத்தையும் பூர்த்தி செய்து மிரட்டியுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சிப் போட்டியில் ஃபிரேசர் மெக்கர்க் தனது பேட்டிங்கின் மூலம் அணியை உற்சாகப்படுத்தினார். அவர் வெறும் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தியது, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அவர் விளையாடிய சில ஷாட்டுகள் மைதானத்தில் அமர்ந்திருந்த பயிற்சியாளரும் துணை ஊழியர்களும் கூட ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில் இக்காணொளியானது வைரலாகி வருகிறது.
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக 9 போட்டிகளில் விளையடிய அவர் 4 அரைசதங்களுடன் 330 ரன்களைக் குவித்தார். இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை விடுவித்திருந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தின் போது மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ரூ.9 கோடிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்கை மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும் அவரின் சமீபத்திய ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது பயிற்சி போட்டியில் அதிரடியாக விளையாடியுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிரிகரிக்கச் செய்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.