ஐபிஎல் 2025: ரிஷப் பந்த் அதிரடி சதம்; ஆர்சிபி அணிக்கு 227 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மார்ஷ் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் மிட்செல் மார்ஷுடன் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் குறிப்பாக இந்த சீசன் முழுவது பேட்டிங்கில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த அவர் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி ஃபார்முக்கு திரும்பினார்.
இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். இதனால் ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது என்ற அறியாமல் தடுமாறினர். அதன்பின் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்த கையோடு மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டா ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.