ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 38ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷேக் ரசீத் ஆகியோர் தொடக்கம் கொடுத்தானர். இதில் ரச்சின் ரவீந்திரா 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ரஷித்துடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். 

Advertisement

அதன்பின் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயூஷ் மாத்ரே 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஷேக் ரஷீதும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் சிஎஸ்கே அணி 63 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை தொடக்கத்தில் ரன்களைச் சேர்க்க தடுமாறினாலும், நேரம் செல்ல செல்ல அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே 30 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்திய நிலையில், 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 50 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் எம் எஸ் தோனியும் 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன் 52 ரன்களைச் சேர்க்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த கையோடு ரியான் ரிக்கெல்டன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். 

அதேசமயம் மறுபக்கம் ஃபார்முக்கு திரும்பிய ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ய, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்ததுடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடியைக் கொடுத்துள்ளது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News