ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றியும், குயின்டன் டி காக் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே 11 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அங்கிரிஷ் ரகுவன்ஷி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கபட்ட ரிங்கு சிங், மனீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து அஷ்வினி குமார் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இறுதியில் ரமந்தீப் சிங் ஒருசில பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இறுதியில் ரமந்தீப் சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய அஷ்வினி குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், விக்னேஷ் புதூர், மிட்செல் சான்ட்னர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி தவித்து வரும் ரோஹித் சர்மா இந்த போட்டியிலாவது ஃபார்முக்கு திரும்புவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிக்கெல்டன் 33 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் வில் ஜேக்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 62 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News