ஐபிஎல் 2025: நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் அபாரம்; மும்பை இந்தியன்ஸை 156 ரன்னில் சுருட்டியது சிஎஸ்கே!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணைத் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டனும் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி வீரர் வில் ஜேக்ஸும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 29 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ராபின் மின்ஸும் 3 ரன்னுடன் ஆட்டமிந்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட நமன் தீர் 17 ரன்களிலும், மிட்செல் சான்ட்னர் 11 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய முன்னாள் சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் இரண்டு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்துள்ளது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.