ஸ்லோ ஓவர் ரேட்: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 54 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த முதல் அணியாகவும் வெளியேறியது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீசிய போது கூடுதல் நேரத்தை எடுத்ததன் காரணமாக போட்டியின் போது 20ஆவது ஓவரில் ஒரு ஃபீல்டரை 30யார்ட் வட்டத்திற்குள் நிற்க வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. மேலும் கள நடுவரும் இதுகுறித்து பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாக இந்த தவறை செய்துள்ளதன் காரணமாக குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதனால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இதற்கு முன் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ரிஷப் பந்த், குஜராத் டைட்டன்ஸின் ஷுப்மன் கில், ராஜஸ்தான் ராயல்ஸின் ரியான் பராக், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும், மும்பை இந்தியன்ஸின் ஹர்திக் பாண்டியாவிற்கும், ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூருவின் ரஜத் படிதாருக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸின் அக்ஸர் பாடேல் அகியோருக்கும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.