ஐபிஎல் 2025: பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்; சிஎஸ்கேவுக்கு 220 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளைப் பறக்கவிட்டு தொடக்கம் கொடுத்தார். ஆனால் மறுபக்கம் அணியின் மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் 9 ரன்களில் நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு மார்கஸ் ஸ்டொய்னிஸும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் தனது அதிரடியைக் கைவிடாத பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த மிரட்டினார். இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய நேஹால் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங்கும் பவுண்டரிகளை விளாசிய நிலையில் பஞ்சாப் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டே சென்றது.
இதில் ருத்ரதாண்டவமாடிய பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். அதன்பின் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 103 ரன்களைக் குவித்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மார்கோ ஜான்செனும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச, மறுபக்கம் ஷஷாங்க் சிங் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களையும், மார்கோ ஜான்சென் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்ததனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததுடன் 219 ரன்களையும் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் கலீல் அஹ்மத் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரீ, நூர் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.