ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் 246 ரன்களைக் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரஷிப்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் மூன்று ஓவர்களிலேயே 50 ரன்களுக்கு மேல் குவித்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின்னர் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரப்ஷிம்ரன் சிங் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய நெஹால் வதேராவும் 27 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய ஷஷாங்க் சிங் 2 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களைக் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket