ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.

Advertisement

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங் ஆகியோரும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் அறிமுக வீரர் கரீம் ஜானத்தும் லெவனில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

Advertisement

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த ஷுப்மன் கில் சதத்தை நெருங்கிய நிலையில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 84 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர்ம் 13 ரன்னிலும், ராகுல் திவேத்தியா 9 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் தள்ளினர். அதிலும் குறிப்பாக அதிரடிக்கு பெயர் போன ஜெய்ஸ்வால் ஒருபக்கம் சிங்கிளை எடுத்த ஸ்டிரைக்கை கொடுத்த நிலையில் மறுமுனையில் ருத்ரதாண்டவமாடிய வைபவ் சூர்யவன்ஷி அடுத்தடுத்து சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினார். 

இதன்மூலம் இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்திய நிலையில், அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை மற்றொரு வேகத்திற்கு மாற்றியதுடன் 35 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் மற்றும் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் உள்பட பல்வேறு சாதனைகளை உடைத்துள்ளார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Advertisement

அதன்பின் இப்போட்டியில் 38 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ரானாவும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரியான் பராக்கும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 70 ரன்களைச் சேர்த்திருந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதேபோல் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திற்கு முன்ன்னேறியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News